சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை காலம் முடிந்து, சசிகலா கடந்த ஜன.27-ம் தேதியன்று விடுதலையானார். மேலும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன்பு குணமடைந்து பெங்களூருவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
இதற்கிடையில் அதிமுக, அமமுக இணையும் என்றும், அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகேட்டை, கண்ணங்குடி ,சாக்கோட்டை பகுதிகளில் ‘தமிழகத்தின் எதிர்காலமே, துரோகத்தை வென்றெடுக்க வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர், எங்களின் ராஜ மாதாவே ,’ என சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த கண்ணங்குடி ஒன்றிய அம்மா பேரவை துனைத் தலைவர் பன்னீர்செல்வம், தேவகோட்டை முன்னாள் ஒன்றிய இளைஞர் பாசறை இணைச் செயலாளர் கலையரசன் , முன்னாள் துணைத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இவர்களைத் தவிர, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கண்ணன் என்பவரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.
காரைக்குடி தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போட்டியிட காய் நகர்த்தி வரும் நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் கூறுகையில், ‘‘ஏற்கெனவே கலையரசன் , ஸ்டாலின் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.