புதுச்சேரியில் சிபிஎம் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ட்விட்டர் நிர்வாகத்துக்கு சிபிஎம் தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சிபிஎம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஎம் புதுச்சேரி பிரதேசக் குழுவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கத்திடம் கேட்டதற்கு, "மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி நிறைய பதிவுகள் வெளியிட்டதை அதிகமானோர் பார்த்துள்ளனர். அத்துடன் வேளாண் போராட்டம் தொடர்பான கருத்துகளைப் பதிவிடுகிறோம்.
மத்திய அரசை விமர்சிப்பதற்காக ட்விட்டர் கணக்கை முடக்குவது தவறானது என்று குறிப்பிட்டு ட்விட்டர் நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்ப உள்ளோம். பேச்சுரிமை, கருத்துரிமை அடிப்படையில் நடந்த விஷயங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் ட்விட்டரில் முன்வைத்து வெளியிடுகிறோம். மத்திய அரசின் நிர்பந்தத்தால் இக்கணக்கை முடக்கியது தவறு" என்று குறிப்பிட்டார்.