மதுரையில் போக்குவரத்து சிக்னல் மற்றும் முக்கிய சந்திப்புகள் அருகே பேருந்து நிறுத்தங்கள் செயல்படுவதால் அப்பகுதிகளில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதால் நெரிசல் ஏற்பட்டு தினமும் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலைகளைக் கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சென்னைக்கு அடுத்து பெரும் நகரமான மதுரையில் மாநகர அரசு பஸ்கள் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றது. 24 மணி நேரமும் மாநகர அரசுப் பேருந்துகள் இயங்குவதால் மக்கள் ஒரிடத்தில் இருந்து நகரத்தின் எந்தப் பகுதிக்கும் இந்த பேருந்துகளில் சென்று வரலாம்.
ஆனால், இந்தப் பேருந்துகள், கடந்த 25 முதல் 50 ஆண்டுகளுக்கு முன் அரசுப் போக்குவரத்துத் துறை அறிவறுத்திய பேருந்து நிறுத்தங்களிலேயே நிறுத்தப்படுகின்றன.
தற்போதைய வாகனப் போக்குவரத்து நெரிசல் அடிப்படையில் அந்த பேருந்து நிறுத்தங்களை நெரிசல் இல்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
ஆனால், அதை செய்யாததால் சிக்னல் அருகே, முக்கிய சந்திப்புகள் மற்றும் திருப்பங்களிலேயே பேருந்து நிறுத்தங்கள் செயல்படுவதால் மாநகர்ப் பகுதிகளில் அரசுப் பேருந்து நிறுத்தங்களால் நெரிசல் ஏற்படுகின்றன.
அதுவும், வைகை ஆற்றின் தென் கரையில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களால் தற்போது போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பிக்கிறது.
உதாரணமாக பெரியார் நிலையத்திலிருந்து, கீழமாரட் வீதி வெங்காய மார்க்கெட் வழியாக முனிச்சாலை சாலையில் செல்லும் சிலைமான், திருப்புவனம், செல்லும் மாநகர அரசுப் பேருந்துகள் நெல்பேட்டை நான்கு முனை சிக்னல் சந்திப்பிலேயே நிறுத்தப்படுகின்றன. சற்று முன் தள்ளி நிறுத்துவதில்லை.
முனிச்சாலை செல்லும் சாலையின் துவக்கத்திலேயே வெற்றிலைப்பேட்டை கார்னர் வளைவில் நிறுத்துவதால் சிக்னல் கிடைத்தும் முனிச்சாலை செல்லும் மற்ற வாகனங்கள் நகர்ப்பேருந்துகளின் பின்புறத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை பல ஆண்டாக உள்ளது.
மேலும், இதனால், பழைய சிந்தாமணி தியேட்டர் இப்போதைய ராஜ்மகால் ஜவுளிக் கடை வழியாக, செயின்ட் மேரிஸ் சர்ச் வழியாக பெரியார் நிலையம் செல்லும் மாநகர நகர்ப்பேருந்து உள்ளிட்ட பிற வாகனங்களும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர் ஜெரால்டு தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, காவல்துறை ஆணையர் வாட்ஸ் அப் எண்ணிற்கு இதைப் பற்றி விளக்கி புகார் தெரிவித்திருந்திருந்தனர்.
நகரப் பேருந்து நிறுத்தத்தைத் தள்ளி அமைப்பது குறித்து, மதுரை மாநகர அரசுப் பேருந்து போக்குவரத்து துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று எனக்கு பதில் (எஸ்எம்எஸ்) அளித்தனர்.
இது குறித்து, மாநகர அரசு போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நெரிசல் உள்ள பேருந்து நிறுத்தங்கள் குறித்து தகுந்த நியாயங்களுடன் புகார் செய்தால் அந்த பஸ் நிறுத்தங்களை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும், என்றனர்.