தூத்துக்குடி அருகே ஏரல் காவல் ஆய்வாளரை சுமை வேனை மோதவிட்டு கொலை செய்த இளைஞர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று இரவு போலீஸாருடன் ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு உள்ள உணவகம் அருகே மதுபோதையில் தகராறு செய்த இளைஞரை உதவி ஆய்வாளர் பாலு, சத்தம் போட்டு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், கொற்கை விலக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் உதவி ஆய்வாளர் பாலு சென்றபோது, அந்தத் தகராறில் ஈடுபட்ட இளைஞர் சுமை வேனைக் கொண்டு மோதவிட்டார். இதில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. துரை கண்ணன், ஏரல் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உதவி ஆய்வாளர் பாலுவை சுமை வேனை மோதவிட்டு கொலை செய்தது கொற்கை விலக்கு சாலையை சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல்(34) என்பதும்,
இவர் தனது வீட்டின் அருகிலேயே இருச்சக்கர பழுது நீக்கம் செய்யும் கடை வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், முருகவேல் இன்று காலை விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி சரவணக்குமார் விசாரணை நடத்தி, முருகவேலை பிப்.5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பிப்.5-ம் தேதி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்புடன் முருகவேலை தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.