பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக புதுவைத் தேர்தல் பொறுப்பாளரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்பமொய்லி தெரிவித்தார்.
புதுச்சேரியில் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்கு நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்பமொய்லி, பல்லம்ராஜூ, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நிதின் ரவுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வீரப்பமொய்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுவையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஜார்க்கண்ட் மாநிலக் கடனை மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி தள்ளுபடி செய்தார் என்ற குற்றச்சாட்டை பாஜக தலைவர் நட்டா கூறியுள்ளது தவறானது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
பிஹாரைப் பிரித்தபோது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு ஜார்க்கண்ட் மாநிலக் கடனைத் தள்ளுபடி செய்தது. நாராயணசாமி அந்தக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. கடும் குளிரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட பிரதமர் மோடி முன்வரவில்லை. புதுவையில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை. கிரண்பேடி இரட்டை ஆட்சி நடத்துகிறார். நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகளை நேரடியாக அழைத்துப் பேசி உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.
மக்கள் நலத்திட்டங்களை கிரண்பேடிதான் தடுக்கிறார். புதுவை மக்கள் பாஜக மீதும், அதன் கூட்டணி கட்சிகள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியிலிருந்து சிலர் வெளியேறியுள்ளனர். அவர்கள் வெளியேறியதால்தான் கட்சியில் உண்மையான விசுவாசிகள் யார் எனத் தெரிகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் இதனையறிந்து கடுமையாக உழைப்பார்கள். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பால் ஆட்சியை மீண்டும் பிடிக்கும்".
இவ்வாறு வீரப்பமொய்லி தெரிவித்தார்.