மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்காக திப்பம்பட்டியில் கட்டப்பட்டு வரும் நீரேற்று நிலைய கட்டிடப் பணிகளை சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா வடி நிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்துக்காக, மேட்டூர் அடுத்த எம்.காளிப்பட்டியில் குழாய் பதிக்கும் பணி மற்றும் திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்க கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
மேட்டூர் அணையின் உபரிநீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்துக்காக திப்பம்பட்டியில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரிவரை 12 கிமீ குழாய் பதிக்கும் பணிகளும், திப்பம்பட்டியில் நீரேற்று நிலையத்துக்கான கட்டிடப் பணிகளும் மேற்
கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேட்டூர் உபரிநீர் திப்பம் பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 23 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும். மேலும், எம்.காளிப்பட்டி தொகுப்பில் கண்ணந்தேரி ஏரியில் துணை நீரேற்று நிலையம் மூலம் 30 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் சாயி ஜனார்த்தனன் உட்பட பலர் உடனிருந்தனர்.