தமிழகம்

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திடுக: ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதிமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், ''டெங்குக் காய்ச்சல் சென்னையில் படு வேகமாக பரவி வருகிறது. பல மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றாலும், மாநகராட்சி அதிகாரிகளே அந்த தகவல்களை திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்.

ஒரு வயது குழந்தை உள்பட மாணவரும் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்திருப்பது மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்த நிர்வாக சீர்கேட்டில் திணறி நிற்கும் அதிமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி இதையெல்லாம் மறுத்து வருகிறது.

“டெங்கு தமிழகத்திற்குள் நுழையவே பயப்படுகிறது” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரோ, “அக்டோபர் மாதத்தில் மட்டும் சென்னையில் 484 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது” என்று கூறுகிறார். ஆகவே சுகாதாரத் துறை அமைச்சரே டெங்குக் காய்ச்சல் பற்றிய புள்ளிவிவரங்களை மறைக்கிறார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் 250 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்கள். அந்த விவரங்களை எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் மறைத்து விட்டனர்.

“டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிடக் கூடாது” என்று தனியார் மருத்துமனைகள் மட்டுமல்ல, சென்னை மாநகராட்சி அதிகாரிகளே கூட மிரட்டப்படுகிறார்கள். பத்திரிக்கையாளருக்கு தகவல் கொடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஏற்கனவே காலரா நோயால் மரணம் அடைந்தவர்களுக்கு வேறு காரணங்களைப் போட்டு இறப்புச் சான்றிதழ் கொடுத்த மாநகராட்சியிடம் இதை விட வேறு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விடுத்து விட்டு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய பட்டியலை வெளியிடக் கூடாது என்று மிரட்டுகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கொசு மருந்து தெளிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறவில்லை. மழை நீர் தேங்காமல் இருக்கவும் எந்த நடவடிக்கையும் சென்னை மாநகராட்சி எடுக்கவில்லை. மழை நீர் கால்வாய்களையும் சீரமைக்கவில்லை. பராமரிக்கவும் இல்லை.

அண்ணா நகர், மணலி, திருவெற்றியூர் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் படு மோசமாக இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. இது தவிர மர்மக் காய்ச்சலும் சென்னை மாநகர மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அப்பகுதிகளில் மழை நீர் தேக்கம் மற்றும் சாக்கடை நீர் கலப்பது பற்றியோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியே இந்த மாநகராட்சி துளியும் கவலைப்படாமல் இருக்கிறது.

முதலமைச்சரைப் பாராட்டி தீர்மானம் போடுவதற்கே சென்னை மாநகராட்சிக்கு நேரம் போதவில்லை. மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச முனையும் திமுக மாநாகர மன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை குண்டுக் கட்டாக வெளியேற்றுவது போன்ற அராஜ செயல்களுக்கு மட்டுமே மேயருக்கு நேரம் இருக்கிறது. வாக்களித்த மக்களை அதிமுக அரசு எப்படி வஞ்சிக்கிறதோ அதே போல் சென்னை மாநகராட்சியும் வஞ்சிக்கிறது.

செயல்படாத சென்னை மாநகராட்சியால் இன்றைக்கு மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி தவிக்கிறார்கள். மாநகரின் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாமல் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சென்னை மாநகராட்சி இன்றைக்கு முற்றிலும் நிர்வாக ரீதியாக தோற்றுப் போய் கையறுந்த நிலையில் நிற்பது வெட்கக்கேடானது.

ஆகவே, டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அதிமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், மேடு பள்ளங்களாக காட்சியளிக்கும் சாலைகளை சீரமைக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி மருத்துமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு வட்டத்திலும் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து மக்களுக்குத் தேவையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி செயல்படும் என்பதற்காக காத்திராமல், கழகத் தொண்டர்களும் ஆங்காங்கு விழிப்புணர்வு முகாம்களையும், மருத்துவ முகாம்களையும் நடத்தி மக்களுக்கு தேவையான சிகிச்சை உதவிகளை வழங்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT