மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் ஆன்மிகம், அறிவு சார்ந்த பயிற்சி அளிக்கும் கேந்திரமாக உருவாக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
இதுகுறித்து அவர் `இந்து தமிழ் திசை’ நாளிழிதழுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது: பொதுவாகப் பாரம்பரியமாகக் காப்பாற்றும் தெய்வத்தை குலச்சாமிஎனக் கூறுவோம். தமிழினத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அவரது உழைப்பு, சேவை, தொண்டு உள்ளத்தை மக்கள் தினமும் நினைவு கூறுகின்றனர்.
அதை வழிபாட்டு இடமாகமட்டும் உருவாக்குவது மட்டுமின்றி, சேவை மையமாகவே உருவாக்குகிறோம். மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாலை நேரப் பல்கலைக்கழகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே நாங்கள் நடத்தி வரும் தலைமைப் பண்பு, வழிகாட்டு பயிற்சி, விவசாயிகளுக்கான பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படும்.
சேவை மையம்
வழிபாட்டுத் தலம் மட்டுமின்றி, ஜெயலலிதாவின் கனவைநிறைவேற்றும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும்சேவை மையமாகவும் இக்கோயிலை உருவாக்கி உள்ளோம். இதற்கு முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல்கள் பேருதவியாக இருந்தது. அவர்கள் அரசாணை வழங்கினர். இதற்காக முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
இந்த கோயில் வளாகம் ஆன்மிகம், அறிவு சார்ந்த பயிற்சிகள் வழங்கும் கேந்திரமாகவும், ஆரோக்கியம் சார்ந்த முகாம் நடத்தும் கேந்திரமாகவும் அம்மாவின் திருக்கோயிலை உருவாக்கத் திட்டமிட்டு செயல்படுகிறோம். ஆன்மிகச் சொற்பொழிவுகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
முதன் முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இக்கோயில் மூலம் ஜெயலலிதாவின் புகழை அழியாத, நீடித்த புகழாகக் காலம் கடந்தும், நூற்றாண்டு கடந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எங்களின் உணர்வின் வெளிப்பாடு, விசுவாச உணர்வின் அடையாளமே இக்கோயில். இவ்வாறு அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கூறினார்.