ஒகேனக்கல் முதலைப் பண்ணை எதிரேயுள்ள காவிரியாற்றில் குளிக்க திரண்ட சுற்றுலா பயணிகள். 
தமிழகம்

விடுமுறை தினத்தில் களைகட்டியது ஒகேனக்கல்: அருவியில் குளித்தும், பரிசலில் பயணித்தும் பயணிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், அருவி பகுதி மற்றும் பரிசல் துறை களைகட்டியது.

ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு வழக்கமான நாட்களில் பயணிகள் வருவதைக் காட்டிலும் விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். நேற்று வார விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

இதனால், அங்குள்ள தள்ளுவண்டிக் கடைகள் தொடங்கி உணவு விடுதிகள், சமையல் கலைஞர்களின் சமையல் கூடம், ஆற்றங்கரையில் உள்ள மீன் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக மையங்களிலும் வர்த்தக சுழற்சி விறுவிறுப்பாக இருந்தது.

அதேபோல காவிரியாற்றில் ஏராளமானோர் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை ரசித்தனர். பயணிகள் பலர் எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனால், மசாஜ் கலைஞர்களும் தங்கள் பணிகளில் சுறுசுறுப்படைந்தனர். முதலை பண்ணை மற்றும் மீன் பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பார்வையாளர் இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.

பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததால், குற்ற நிகழ்வுகளை தடுக்க காவிரி ஆறு, பிரதான அருவி, பரிசல் துறை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT