பெட்ரோலில் 25 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ. 3,500 என விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாய விளைபொருட்கள் உற்பத்திச் செலவு மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசித்து கரும்பு கொள்முதல் விலை இந்த ஆணையத்தால் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம், ஆணையத்தின் தலைவர் அசோக் விஷான்தாஸ் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாநில கரும்பு விவசாயிகள், மாநில அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களாக மாநில வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் ஆகிய முத்தரப்பினர் கலந்துகொண்டனர். இதில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், உ.பி., உத்தரகண்ட், பிஹார், பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிங்களின் முத்தரப்புக் குழுவினர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் தமிழக கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கி.வே.பொன்னையன், எம்.வி.சண்முகம், தமிழக அரசு வேளாண்மை கல்லூரியின் பொருளாதாரத்துறை தலைவர் ஆர்.பாலசுப்பரமணியம், தமிழக அரசின் விவசாயத் துறையின் கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கி.வே.பொன்னையன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “2015-ல் சர்க்கரை ஆலைகளுக்கான வயல்வெளி விலையாக, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 2,100-ல் இருந்து ரூ. 3,500 ஆக உயர்த்தித் தரும்படி வலியுறுத்தினோம். இது நியாயமான மற்றும் ஆதார விலை ஆகும். இம்முறை சர்க்கரை ஆலைகள் வழக்கமாக அளிக்கவேண்டிய தங்கள் நிர்ணய விலையை, தமிழக அரசு கேட்டுக்கொண்ட பின்னரும் அளிக்கவில்லை” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “விலை நிர்ணயிப்பதில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்கக் கூடாது எனவும், எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பார்முலாவான ‘C2+50%’ என்பதை அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டோம்” என்றார்.
மற்றொரு ஒருங்கிணைப்பாளரான எம்.வி.சண்முகம் கூறுகையில், “கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் எத்தனாலை பெட்ரோலில் 25 சதவீதம் கட்டாயம் கலக்கவேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். இதனால், பெட்ரோல் இறக்குமதி குறைந்து அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி மிச்சமாகும். மிகவும் குறைந்த கார்பன் கொண்ட எத்தனாலால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் சர்க்கரை தொழில் விருத்தியாகி, ஆலைகளும் விவசாயிகளுக்கு உகந்த விலையை தரமுடியும். இதற்காக எத்தனால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.30-ல் ரூ.60 ஆக உயர்த்த வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டோம்” என்றார்.
பெட்ரோலில் 5 சதவீத எத்தனால் கலக்கவேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இது உத்தரவில்லை என்பதால் இதை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் கரும்பு விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
சர்க்கரையில் இருந்தும் நேரடியாகத் தயாரிக்கப்படும் எத்தனால், ஒரு டன் கரும்புச் சக்கையில் சுமார் 30 லிட்டர் என்ற அளவில் கிடைக்கிறது. பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.