கடந்த நவம்பர் மாதம் கடைசி மற்றும் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வந்த நிலையில், ஜனவரி மாத தொடக்கத்தில் 10 நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழையால் மீண்டும் தூத்துக்குடி மாநகரம் தண்ணீரில் தத்தளித்தது.
மக்கள் அவதி
தற்போது மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் உருக்குலைந்து கிடக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஜார்ஜ் சாலை சந்திக்கும் ரவுண்டான பகுதியில் பெரும் குழிகள் ஏற்பட்டு, அபாயம் நிலவுகிறது.
இதேபோல் பிரையன்ட் நகர் பிரதான சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர். குறிஞ்சிநகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், தனசேகரன் நகர், தபால் தந்தி காலனி, மில்லர்புரம், அண்ணாநகர், டூவிபுரம், சிதம்பரநகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத சாலைகள் கடுமையாக சேதமடைந்துவிட்டன.
நகரின் பிரதான சாலைகளான வி.இ.சாலை, திருச்செந்தூர் சாலை, விவிடி பிரதான சாலை உள்ளிட்ட சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால், இந்த சாலைகளிலும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரமைக்க நடவடிக்கை
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறும்போது, “தூத்துக்குடி மாநகரில் தேங்கிய மழை வெள்ளம் பெரும்பாலும் அகற்றப்பட்டுவிட்டது. ஒருசில இடங்களில் ஊற்றுத் தண்ணீர் பெருக்கெடுப்பதால் இன்னும் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.
அந்த பகுதிகளிலும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும். மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடையும் போது, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நிதி வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக சாலைகளை சீரமைக்கும் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.