‘‘ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தால் நிச்சயம் நல்ல மாற்றம் வரும்’’ என தென்மண்டல சமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தி்ல் அக்கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சரத்குமார் பேசும்போது, ‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலை தனித்து சந்திக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தொண்டர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறேன். கடந்த ஆண்டு மக்கள் பெரும் கஷ்டங்களை சந்தித்து விட்டதை பயன்படுத்தி ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து வாக்குகளை வாங்க நினைக்கின்றனர்.
யாரும் அந்தப் பணத்தை வாங்கக்கூடாது. ஓட்டுக்காக பணத்தை கைநீட்டி வாங்கியவர் தம்மை தாமே விற்று விடுகிறார். இது வருங்கால இளைய தலைமுறை சந்ததியினரை விற்றதற்கு சமமாகும். பணம் பெறாமல் கொள்கை முடிவுடன் வாக்களித்தால் நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள். நல்ல மாற்றம் வருவது நிச்சயம். உங்களிடம் இருந்து அது தொடங்க வேண்டும். உங்களுக்காக முழு நேரமும் உழைக்க தயாராக உள்ளேன்’’ என்றார்.
மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார், கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசன் பொன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.