கரோனா காலத்தில் தமிழக அரசும், தெலங்கானா அரசும் சிறப்பாக செயல்பட்டதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவத்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று(31-ம் தேதி) கோவைக்கு வ்நதார். கோவையில் இருந்த அவிநாசிக்கு சென்ற அவர் அங்குள்ள தங்களது குல தெய்வக் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் தரிசனம் மேற்கொண்டார்.
அதன் பின்னர், மருதமலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனாவில் இருந்து நாடு விடுபட வேண்டும். எல்லோரும் சுகமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்து நேற்று பழநிக்கு சென்று விட்டு, இன்று மருதமலைக்கு வந்துள்ளேன். நான் கோவையின் மருமகள் என்பதால், இந்த மருதமலை எனது உணர்வோடு ஒன்றிய கோயில் ஆகும். இன்றைய தினம் கரோனாவில் இருந்து நாம் எல்லோரும் விடுபட்டு, தடுப்பூசி காலத்தில் நுழைந்துள்ளோம். நாம் உலக நாடுகளில், மிகப் பெருமையோடு பீடுநடை போடுவதற்கு காரணம், நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி நமக்கு போடப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு நாம் அதை ஏற்றுமதி செய்து இருக்கிறோம் என்பது மிகப்பெருமையான தருணமாகும்.
விஞ்ஞானிகளுக்கு நன்றி
நாம் சுய சார்பானவர்களாக வாழ்வதற்கு பெருமையடைய வேண்டும், இந்த குடியரசு தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும் சூழலில், சுதந்திர போராட்ட வீரர்களை நன்றியோடு, நினைவு கூற வேண்டும் என்றும், இந்த வருடம் முழுவதும் நமக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை நாம் பின்பற்ற வேண்டும். கடந்தாண்டு ஒரு அச்சத்திலேயே நாம் இருந்தோம். நடப்பாண்டு, அந்த அச்சத்திலிருந்து விடுபட நமது விஞ்ஞானிகள் நமக்கு வழிவகை செய்துள்ளனர். அதற்காக விஞ்ஞானிகளுக்கு நாம் நன்றி கூற வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊடகத்துறையினர் ஆகிய முன்களப் பணியாளர்கள் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினர்.
அவர்களுக்கு நன்றி கூறும் விதமாகத் தான், முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி, நன்றி ஊசியாக போடப்படுகிறது. அவ்வாறு ஊசி போடுவது பரிசோதனை முயற்சி அல்ல. அது அவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசு. நான் முன்களப் பணியாளராக இருந்தால் தடுப்பூசி முதலில் போட்டு இருப்பேன். ஆளுநராக இருப்பதால், மக்கள் போட்டுக் கொள்ளும் போது, அவர்களுடன் சேர்ந்து நானும் போட்டுக் கொள்கிறேன். தடுப்பூசியை செலுத்த முன்களப் பணியாளர்கள் தயங்கத் தேவையில்லை. அனைவரும் பாதுகாப்பாக இந்த தடுப்பூசியை ஏற்றுக் கொள்ளலாம். தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்கு எனது நன்றி.
தமிழக, தெலங்கானா அரசின் செயல்பாடு
கரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசு சிறப்பாக வழிகாட்டியது. கரோனா காலத்தில் தமிழக அரசு, தெலங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டது. மக்கள் நெருக்கம் நிறைந்த இந்தியாவில், கரோனா காலத்தில் 20 லட்சம் பேர் உயிரிழப்பர் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆனால், நாம் வேகமாக கரோனாவில் இருந்து மீண்டு வந்து இருக்கிறோம். இது நாட்டின் பெருமையாகும். இதற்கு வழிகாட்டிய மத்திய அரசுக்கும், நடைமுறைப்படுத்திய மாநில அரசுகளுக்கும், பின்பற்றிய மக்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மருத்துவர் என்ற முறையில் கரோனா காலத்தில் தெலங்கானா அரசுக்கு சில ஆலோசனைகளை கூறினேன். தமிழக சுகாதாரத்துறையிடம் இருந்து நட்பு ரீதியில் சில தகவல்களை கேட்டு தெலங்கானா அரசுக்கு கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.