நீங்கள் கடலூரைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருந்தால், குண்டுஉப்பலவாடி, குண்டுசாவடி, நத்தவெளி குண்டுசாலை, செம்மண்டலம் குண்டுசாலை என நகரில் சில பகுதிகளின் பெயர்களுடன் ‘குண்டு’ ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கக் கூடும்.
அதென்ன ஏரியா பெயர்களுடன் ‘குண்டு’ ஒட்டிக் கொண்டிருக்கிறது..! தெரிந்து கொள்வோம்... அவையெல்லாம் பீரங்கி குண்டு... ‘என்ன பீரங்கி குண்டா..! கடலூரில் போர் நடந்ததா என்ன? ’மேலே குறிப்பிட்ட இந்த இடங்களிலெல்லாம் பீரங்கி குண்டுகள் விழுந்தது உண்மை. ஆனால், நடந்தது போர் அல்ல! சொத்து விற்பனை! என்ன? ‘அதற்கெல்லாமா குண்டுகளை வீசுவார்கள்..!’
ஆம்... வீசியிருக்கிறார்கள். விற்கப்பட்டது ஒரு கோட்டை. அது வாங்கியதோ ஒரு வினோதமான முறையில். அந்தக் கோட்டையின் பெயர் ‘புனித டேவிட் கோட்டை’ அதனை வாங்கியவர்கள் ஆங்கிலேயர்கள். என்ன நடந்தது என்பதை அறிய, தற்போதும் கடலூரின் புகழ்மிக்க வெள்ளிக் கடற்கரையின் அருகே சிதிலமடைந்த நிலையில் இருக்கிற புனித டேவிட் கோட்டையின் வரலாற்றை அறிவது அவசியம்.
செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய கோட்டையாக இருந்த இக்கோட்டை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1677-ல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் இக்கோட்டை மராத்தியரின் கைக்கு வந்தது. பின்னர் 1684-ம் ஆண்டு மராத்திய மன்னரும் வீர சிவாஜியின் மகனுமான சம்பாஜி ஆங்கிலேயர்களுக்கு இவ்விடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். பின்னர் 1690-ம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் அதனைச் சுற்றி மராத்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளும் கிராமங்களும் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்களால் மொத்தமாக வாங்கப்பட்டன.
அதன்பிறகு இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல் என்பவர், ‘புனித டேவிட் கோட்டை’ என்று பெயரிட்டார். எலிகு யேல் பிரிட்டிஷ் இராச்சியத்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். அதனால், வேல்ஸ் பகுதியின் புகழ்மிக்க கிறிஸ்தவத் துறவியான புனிதர் டேவிட் பெயரை கடலூரின் கோட்டைக்குச் சூட்டினார். இந்தக் கோட்டையை ஆங்கிலேயர் வாங்கியபோது, கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக வினோதமான வழிமுறை கையாளப்பட்டது.
இக்கோட்டையில் இருந்து அனைத்துத் திசைகளிலும், வானை நோக்கி பீரங்கி குண்டுகள் சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகள் கோட்டைக்குச் சொந்தமான பகுதிகளாக கை கொள்ளப்பட்டன. அதன்படி, இக்கோட்டையிலிருந்து 6 முதல் 7 கி.மீ வரையிலான சுற்றளவுள்ள கடலூரின் பகுதிகள் ஆங்கிலேயர் வசமாயின. இன்றும் அந்தக் கிராமங்கள் மற்றும் பகுதிகள் ‘குண்டுஉப்பலவாடி‘, ‘குண்டுசாவடி’ மற்றும் ‘குண்டுசாலை’ என்ற பெயர்களால் அழைக்கப்படுவது அந்த வரலாற்றை நமக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது என்கின்றார் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் நா. சேதுராமன்.