என்எல்சி முதல் அனல் மின் நிலையம். 
தமிழகம்

உழைத்து ஓய்ந்தது என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம்

ந.முருகவேல்

தெற்காசியாவில் முதன்முறையாக நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்த பெருமை என்எல்சி முதல் அனல் மின்நிலையத்திற்கு உண்டு. சோவியத் ரஷ்யாவின் தொழில்நுட்பத்தில் உருவான இந்த அனல் மின்நிலையம் மணிக்கு 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தது. கர்மவீரர் காமராஜரின் கடும் முயற்சியினால் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தான் வெட்டியெடுக்கும் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின்சாரம் தயாரிக்க முன் வந்தது. ரூ.78 கோடி மதிப்பீட்டில் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த ‘டெக்னோ ப்ரேம் எக்ஸ்போர்ட்’ என்று நிறுவனம் அனல்மின் கட்டுமானப் பணியை தொடங்கியது.

23-05-1962 அன்று 50 மெகாவாட் திறனுடன் உற்பத்தியை தொடங்கிய போது, அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனல்மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் என்எல்சி நிர்வாகம் படிப்படியாக அனல்மின் நிலையப் பணியை விரிவுப்படுத்தியதன் விளைவாக 1970-களில் 9 யூனிட்டுகளுடன் 600 மெகா வாட் மின் உற்பத்திக்கு உயர்ந்ததோடு, தான் உற்பத்தி செய்த மின்சாரத்தில் 90 சதவீதத்தை தமிழகத்திற்கே வழங்கியது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த முதல் அனல்மின் நிலையம் கடந்த 58 ஆண்டுகளில் 3 தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு அளித்து சுமார் 4 ஆயிரம் மனிதத் திறன்களைப் பயன்படுத்தி 32 லட்சத்து 67 ஆயிரம் மணி நேரம் இயங்கி, 18 ஆயிரத்து 540 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. தொடர்ந்து இயங்கும் திறன் இருந்தாலும், தரம் சார்ந்த ஆயுட் காலத்தைக் கருதி மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி கடந்த 30.09.2020 அன்றுடன் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது முதல் அனல் மின்நிலையம். தனது இயக்கக் காலத்தில், 11 முறை மின் உற்பத்திக்கான தேசிய விருது பெற்றுள்ளது.

2003-04 ஆண்டுகளில் 347 நாட்கள் தொடர்ந்து இயங்கி 440 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இந்த அனல்மின் நிலையத்தை நிர்மாணித்த ரஷ்ய நிறுவனம், முதல் அனல் மின் நிலையத்திற்கு அளித்த ஆயுட்காலம் 25 ஆண்டுகள். ஆனால் அதையும் தாண்டி மேலும் 15 ஆண்டுகள் ஆயுள் நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆயுள் நீட்டிப்புக்கு பின்னரும் 18 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த நிலையில் தான் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது முதல் அனல்மின் நிலையத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றியவர்கள் நிறுவனத்தின் வேறு அனல்மின் நிலையப் பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

“பின்தங்கிய மாவட்டத்தில் ஒளி வெள்ளம் பாய்ச்சிய பெருமை என்எல்சி முதல் அனல் மின் நிலையத்திற்கு உண்டு. பல பொறியாளர்களுக்கு பயிற்சிக் களமாகவும், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதிலும் பெரும்பங்காற்றிய முதல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். இப்போதும் அந்த வழியாகச் செல்லும் போது, ஒரு இனம் புரியாத உணர்வு எனக்குள் வந்து செல்கிறது. என் ஆயுட் காலம் முழுவதும் அந்த உணர்வு இருக்கும். எனக்கு மட்டுமில்லை, என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் முதல் அனல் மின் நிலையத்தின் மீது அப்படியொரு பாசம் உண்டு.” என்கிறார் கடந்த 30 ஆண்டுகளாக முதல் அனல்மின் நிலையத்திலேயே பணியாற்றிய மூத்தத் தொழிலாளி மு.சு.பொன்முடி.

இவரைப் போல, இங்கு பணியாற்றிய பலர் கடந்த சில மாதங்களில் உணர்வுவயப்பட்டு பேசுவதை நாம் காண முடிகிறது. காலங்கள் மாறி, காட்சிகள் மாறி எங்கெங்கோ எது எதுவோ நடக்கின்றன. பணி சார் சூழல்களும், பணியாளர்கள் மீதான பார்வையுமே மாறிக் கொண்டிருக்கிற அவசர கதி உலகம் இது. அதற்கு மத்தியில், தான் பணியாற்றிய பணியிடத்தின் மீதான காதல் கொண்டிருக்கும் இந்தப் பொன்முடி போன்ற தொழிலாளர்களாலேயே தொழிற்கூடங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை நிமிர்த்து, இடையூறுகளை எதிர்கொண்டு நிற்கின்றன. அவர்களைப் போற்றுவோம்; அதன் மூலம் தொழில் வளர்ச்சியை அதிகரிப்போம்.

SCROLL FOR NEXT