தமிழகம்

பவ்டா 40,824 சுய உதவி குழுக்களும் 6,65,596 உறுப்பினர்களும்….

எஸ்.நீலவண்ணன்

ஊர்கள் தோறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல இருக்கின்றன. பலவாறு செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘பவ்டா’. விழுப்புரத்தை மையமாகக் கொண்டு இத்தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. நமது விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் நம்மில் பலர் ‘பவ்டா’ என்ற இந்தப் பெயரை பல முறை பார்த்தவாறே கடந்து சென்றிருப்போம்.

‘அந்த நிறுவனம் என்ன செய்கிறது..? அதன் செயல்பாடு என்ன…?’ இந்தக் கேள்வி நம்முள் எழுந்திருக்கலாம். ‘பவ்டா’ நிறுவனத்தை அதன் நிறுவனர் செ.ஜாஸ்லின் தம்பி, முதன்மை செயல் அலுவலர் அல்பீனா ஜோஸ் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் பணிகள், வளர்ச்சிகள் குறித்து அவர்களிடம் பேசினோம். ஜாஸ்லின் தம்பி தனது பால்ய பருவத்தில் இருந்து தொடங்கினார்...

“கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி என்ற கிராமத்தில் பிறந்தேன். என் தந்தை செல்லய்யா மாட்டு வண்டி தொழிலாளி. 8 பேரில் கடைசியாக பிறந்த நான், பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தந்தைக்கு உதவியாக இருப்பதுண்டு. புதன், சனிக்கிழமைகளில் கூடும் கருங்கல் சந்தைக்கு மாட்டு வண்டியில் காய்கறிகளை கொண்டு சென்று விற்று விட்டு, மளிகைப் பொருட்களை வாங்கி வருவதுண்டு.

குமரி மாவட்ட சாலைகள் ஏற்றத் தாழ்வுகளை கொண்டதால் சுமையை மாடுகள் சிரமப்பட்டு இழுக்கும். உடன் செல்லும் நானும் என் சகோதரர்களும் மேட்டில் வண்டியை தள்ளியும், சரிவில் வண்டியை இழுத்துப் பிடித்தும் செல்வதுண்டு. இதனால் மாட்டு வண்டி தொழி லாளர்களின் சிரமங்கள் எங்களுக்குப் புரியும். அப்படியே ஓடிய வாழ்க்கையில் மார்த்தாண்டத்தில் பி.ஏ வரலாறும், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் எம்.ஏ சமூக அறிவியலும் படித்து முடித்தேன். அதன்பின் அறிமுகமான வால்டர் மாணிக்கம் என்பவர் மூலம் இடதுசாரி சிந்தனை என்னுள் விதைக்கப்பட்டது.

அதன்பின் குமரி மாவட்டத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அப்போது, மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினையை முழுமையாக உள்வாங்கினேன். திண்டுக் கல், விழுப்புரம் மாவட்டங்களில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதிகம் இருப்பதை அறிந்தேன். இதை தொடர்ந்து 1985-ம் ஆண்டு விழுப்புரத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக (Bullock - cart workers development association) சுருக்கமாக ‘BWDA’ என்ற அமைப்பை தொடங்கினேன். மாடுகளுக்குத் தேவைப்படும் லாடம், அதற்கான ஆணிகளை தருவித்து மிக குறைந்த விலையில் அதாவது வெளிச் சந்தை விலையை விட பாதி விலையில் விற்கத் தொடங்கினோம். தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்களை ஒருங் கிணைக்க முயன்றோம். அது அவ்வளவு எளிதில் நடக்கவில்லை.

ஏழை மக்கள் எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பி விட்டால் மாற மாட்டார்கள் என்பதை உணர்ந்தோம். 1986-ம் ஆண்டு 38 விதமான டயர் வண்டிகளை அறிமுகப்படுத்தினோம். இதற்காக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் டயர் வண்டி உருவாக்கும் வெல்டிங் கடைகளை உருவாக்கினோம். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வீட்டுப் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க முடிவெடுத்து, பயிற்சி கட்டணமாக வாரம் தோறும் அவர்களிடம் இருந்து பிடி அரிசியை கட்டணமாக வசூலித்தோம்.

இப்படி வாரா வாரம் சேமிக்கப்படும் அரிசியை விற்று, 2,500 ரூபாய் முதலீட்டில் தொடங்கி 5 ஆயிரம் பேருக்கு தையல் பயிற்சி அளித்தோம்.1992-ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஆனந்தன் மூலம் தாட்கோவில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1992-93 ம் ஆண்டு 180 மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன.

மகளிர் சுய உதவிக் குழு, மாநில அரசின் திட்டம் என்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் தொடக்கத்தில் கடன் அளிக்க முன்வரவில்லை. பின்னர், இந்தியன் வங்கியின் அப்போதைய தலைவர் கோபாலகிருஷ்ணன் மூலம் ரூ. 15 லட்சத்தை முதன்முதலில் கடனாகப் பெற்று, அதைப் பிரித்து மகளிர் குழுக்களிடம் குறைந்த வட்டியில் அளித்தோம். ‘பவ்டா மைக்ரோ பைனான்ஸ்’ மூலம் கடன் பெற்றோம்.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவடங்களில் மகளிர் மேம்பாட்டிற்கான முயற்சியில் இறங்கினோம். 2002 -ம் ஆண்டு வங்கிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர முன்வந்தன. ஆனால் நாங்கள் 28.08.1999 முதல் இக்குழுக்களுக்கு கடன் அளித்து வந்தோம். இன்று எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 40,824 சுய உதவி குழுக்களும், 6,65,596 உறுப்பினர்களும் உள்ளனர். 2025-ம் ஆண்டுக்குள் 25 லட்சம் குடும்பங்களை சமூக பொருளாதார அளவில் முன்னேற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்படுகிறோம்.

வங்கிகள், மூத்த குடிமக்களுக்கு கடன் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு கடன் அளித்து, தன்னம்பிக்கை ஊட்டுகிறோம். கைம்பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறோம். விழுப்புரம் மாவட்டம் கொள்ளியங்குளத்தில் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் நடுநிலைப்பள்ளி நடத்தி வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கப்பிவிளை என்ற இடத்தில் பாலிடெக்னிக், கடலூர் மாவட்டம் ராசாபாளையம் கிராமத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, காடாம்புலியூரில் பிரைமரி, நர்சரி பள்ளி நடத்தி வருகிறோம்.

இக்கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை விட மிகக் குறைவாக நிர்ணயம் செய்துள்ளோம். இதிலும் எங்கள் உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தில் 25 விழுக்காடு தள்ளுபடி வழங்கி வருகிறோம். மேற்படிப்பிற்காக கல்வி கடனும் வழங்கி வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி சார் பயிற்சி முறைகளை தயார் செய்து, கோடைகால சிறப்பு பயிற்சி நடத்தி வருகிறோம்” என்றார். “தேசிய அளவில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே எங்களின் லட்சியம்” என்கிறார் ‘பவ்டா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அல்பீனா ஜோஸ்.

SCROLL FOR NEXT