தமிழகம்

கல்லூரி மாணவர்களால் கடலூர் வெள்ளிக் கடற்கரை பளிச்

செய்திப்பிரிவு

இளைய சமூகத்தை நல் வழிப் படுத்தி, அவர்களோடு பக்கத் துணையாக நின்றால் போதும். சரியான செயல்களை சரியான நேரத்தில் செய்வார்கள் என்ற கூற்றை மெய்பிக்கும் வகையில் கடலூரில் நேற்று கல்லூரி மாணவர்கள் சிறப்பான சேவையை செய்துள்ளனர்.

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா வுடன் இணைந்து கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் நேரு இளையோர் மன்றம், வெளிச்செம்மண்டலம் ஜெயதேவி இளையோர் நலச்சங்கம் மற்றும் கடலூர் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து நேற்று வெள்ளிக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி ஈடுபட்டன.

வெள்ளிக் கடற்கரையை தூய்மை செய்த மாணவர்கள், அங்கிருந்த குப்பைகளை அகற்றி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். மாணவர்க ளுடன் கடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்று அவர்களை உற்சாகப்படுத்தினர். மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தூய்மைப் படுத்தினர்.

கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ரிஜேஷ் குமார், பெரியார் அரசு கலைக் கல்லூரி நேரு இளையோர் மன்ற பொறுப்பாசிரியரும், சமூகப் பணியியல் துறை தலைவருமான முனைவர் நா. சேதுராமன், கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் பழனிவேலு, கடலூர் கடலோரக் காவல் படை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

காலை முதல் மாலை வரை பொறுப்பாக தூய்மைப் பணி மேற்கொண்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பாராட்டி கடலூர் மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி சான்றிதழ்களை வழங்கினார். தேசிய இளையோர் விருது பெற்ற தன்னார்வத் தொண்டர் சண்முகம் நன்றி கூறினார்.

‘சரியான வழிகாட்டுதல் இல்லாத தாலேயே இளையோர் கவனம் சிதறி, தவறான வழிகளில் செல்கின்றனர். தகுந்த வழிகாட்டுதல்கள் இருந்தால் பொறுப்பான பல செயல்களை செய்வார்கள்’ என்பதற்கு கடலூர் வெள்ளிக் கடற்கரையில் நேற்று இளையோர் செய்த தூய்மைப் பணி ஒரு உதாரணம்.

SCROLL FOR NEXT