காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டிசம்பர் 14-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஆர்.நெல் ஜெயராமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், செயலாளர் எம்.அர்ஜுனன் உள்ளிட் டோர் பேசினர்.
வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைக் கண்டறிய சிறப்புக் குழுக்களை அமைத்து, இழப்பீடுகளைக் கணக்கிட வேண்டும். வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், வாழை, கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம், மானாவாரிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம், கறவை மாடு இழந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம், ஆடு இழந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கி, பேரிடரால் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை அமைத்தல், காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு வரும் டிசம்பர் 14-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது, அனைத்து தேசிய தலைவர்களையும் சந்தித்து தமிழக விவசாயிகளின் பாதிப்புகளை எடுத்துரைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.