தமிழ்நாட்டில் 4,474 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இங்கு சிறு தவணை கடன் பெறுவோர் 2 முதல் 15 மாதங்களில், நடுத்தர தவணை கடன்கள் பெறுவோர் 3 முதல் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.
விவசாயிகளுக்கு பயிர்க் கடன்தளை கொடுப்பது தான் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் முக்கியப் பணியாகும். விழுப்புரத்தில் கடந்த நவம்பர் 6-ம் தேதி செய்தியாளர்களிடையே பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 5,319 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. பழனிசாமி முதல்வரான பின்பு ரூ. 29,817 கோடி பயிர்க் கடன் தரப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக ரூ.832 கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது, “சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவதோடு, மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்டு தரப்படும்” என்றார்.
இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியுள்ளார். அதையும் நாங்களே செய்வோம்” என்றார்.
இதற்கிடையே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன் புதிதாக வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்களிடம் கேட்டதற்கு, “மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆய்வுக் கூட்டத்தின் போது, அதிகாரிகள் வாய்மொழியாக, ‘புதிதாக பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன் தர வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளனர்” என்கின்றனர்.
இதுகுறித்து விவசாய சங்கங்களின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் கலியமூர்த்தி கூறுகையில், “2006 திமுக ஆட்சியில், ‘கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க் கடன்கள் அனைத்தும் அறவே தள்ளுபடி’ என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, ‘சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி’ என்று அறிவித்தது. அதாவது, பெரு விவசாயிகளுக்கான கடன்கள் அப்போது தள்ளுபடி ஆகவில்லை.
தற்போது கூட்டுறவு சங்க செயலாளர்கள் கடன் பெற்ற விவசாயிகளை வரவழைத்து பயிர்க் கடன்களை புதுப்பித்து வருகிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர், நகைக் கடன்கள் அறவே தள்ளுபடி என்பதை தேர்தல் வாக்குறுதியாக முக்கிய கட்சிகள் அறிவிக்க வேண்டும்” என்றார்.