தமிழகம்

‘ஐபேக்’ சொல்படி ஸ்டாலின் நடப்பதாக கூறுவது தவறு: கே.என்.நேரு கருத்து

செய்திப்பிரிவு

‘ஐபேக்’ நிறுவனத்தினர் கூறுவதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்படுவதாக கூறுவது தவறு என்றும், மு.க.ஸ்டாலினுக்கு கீழ் தான் ‘ஐபேக்’ நிறுவனம் செயல்படுவதாகவும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திமுக முதன்மைசெயலாளர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. திருச்சியில் திமுக மாநில மாநாடு நடத்துவதற்கான மைதானம் தயார் நிலையில் உள்ளது. மாநாட்டு தேதியை மு.க.ஸ்டாலின் முறைப்படி விரைவில் அறிவிப்பார்.

சசிகலாவின் வருகை மட்டுமல்ல, யார் வருகையும் திமுகவின் வெற்றியை பாதிக்காது. நிச்சயம் திமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

‘ஐபேக்’ நிறுவனத்தினர் கூறுவதன் அடிப்படையிலேயேஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்படுவதாகக் கூறுவது தவறு. ‘ஐபேக்’ நிறுவனம், திமுக தலைவர் ஸ்டாலினுக்காக, அவருக்குக் கீழ் செயல்படக்கூடிய நிறுவனம். அப்படியிருக்கும்போது அதனால் எப்படி திமுக தலைவரை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT