தமிழகம்

குடிநீர் குழாய் உடைப்பால் நவஇந்தியா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: கோவை லட்சுமி மில் சந்திப்பில் கடும் வாகன நெரிசல்

டி.ஜி.ரகுபதி

கோவை மாநகரின் இதயப் பகுதியாக உள்ள அவிநாசி சாலையில், உப்பிலிபாளையத்தில் தொடங்கி சின்னியம்பாளையம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏராளமான குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. காந்திபுரத்தில் இருந்து ஈரோடு, சேலம், சென்னை, புதுவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு இச்சாலை முக்கியமானதாக உள்ளது. இச்சாலை வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

6 வழிப் பாதையான இச்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.1,620 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், நவ இந்தியா சந்திப்பு முதல் லட்சுமி மில் சந்திப்பு வரை கடந்த இரு தினங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நவ இந்தியா சந்திப்பு அருகே பில்லூர் குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக ஆவாரம்பாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி சகதியாக மாறியுள்ளது. இதனால், எஸ்.ஓ பங்க் நிறுத்தத்தில் இருந்து வரும் வாகனங்கள், நவ இந்தியா சந்திப்புப் பகுதியில் ‘யு டர்ன்’ போட்டு திரும்பவும், வலதுபுறம் ஆவாரம்பாளையம் சாலையில் செல்லவும் காவல்துறையினர் தடை விதித்து ‘டேப்’ கட்டியுள்ளனர்.

வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்புக்கு சென்று ‘யு டர்ன்’ போட்டு திரும்பி வரவேண்டியுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறும்போது, ‘‘லட்சுமி மில் சந்திப்பு சிக்னலில் 60 விநாடிகள் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அதன் பின்னர், மீண்டும் செல்ல சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இதனால் நவ இந்தியாவில் இருந்து லட்சுமி மில் சந்திப்புக்கு செல்ல ஏற்கெனவே வாகன நெரிசல் இருக்கும். தற்போது நவ இந்தியாவில் ‘யு டர்ன்’ போட்டு திரும்ப முடியாத வாகனங்களும் லட்சுமி மில் நோக்கி வருவதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.

இதேபோல, லட்சுமி மில்- நவ இந்தியா வழித்தடத்திலும் நெரிசல் அதிகரிக்கிறது. ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும், காலை, மாலை நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசலை தவிர்க்க, நவ இந்தியா சந்திப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்தில், சாலையின் மையத் தடுப்புகளை தற்காலிகமாக அகற்றி, வாகனங்களை ‘யு டர்ன்’ போட்டு திரும்ப அனுமதிக்கலாம். போக்குவரத்து நெரிசல் தீர காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தற்காலிக மாற்றமே

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆர்.முத்தரசு ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இது தற்காலிக ஏற்பாடுதான். குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர், மீண்டும் வழக்கமான வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். தற்காலிகமாக மையத் தடுப்புகளை அகற்றி, வாகனங்கள் ‘யு டர்ன்’ போட அனுமதித்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமான போக்குவரத்து காவலர்களுடன் அவிநாசி சாலை, திருச்சி சாலையில் கூடுதலாக 20 காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT