திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி 1,361 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்தும் வருகிறது. இந்த மழையால், பல ஆண்டுகளாக வறண்டுக்கிடந்த ஏரிகள் உட்பட, மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள 988 ஏரிகளில், 139 ஏரிகள் நிரம்பியுள்ளன.
ஆவடி அருகே உள்ள கவரப்பாளையம் ஏரி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் அடர்ந்தும் கரை பலப்படுத்தப்படாமலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி முழுவதும் நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்படும் கலங்கல் அருகே பலமிழந்துள்ள கரைப்பகுதி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உடைந்தது. இதனால், மழைநீர் வேகமாக வெளியேறியது. இதனால், கவரப்பாளையம் மற்றும் அதனையொட்டியுள்ள ஆவடி- சிந்துநகர், தனலட்சுமி நகர், காந்திநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையிலும் காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதில் 2 மாநகர பஸ்ஸும், லாரியும் சிக்கின. இதனால் இந்த சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், காந்திநகர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மண் சரிந்தது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள், மண் சரிவை சரி செய்தனர். இதனால், ஆவடி- இந்துக்கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயில்கள் நேற்று குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஏரியில் கரை உடைந்த பகுதியினை மணல் மூட்டைகளை அடுக்கி மழைநீர் வெளியேறாமல் நகராட்சி ஊழியர்கள் தடுத்தனர்.
ஏரிகள் நிரம்பின
இதேபோல் பட்டாபிராம் அருகே உள்ள விளிஞ்சம்பாக்கம் ஏரி, ஆவடி- பருத்திப்பட்டு ஏரி, போலிவாக்கம் பெரிய ஏரி, திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
பேரம்பாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நேற்று அடித்துச் செல்லப்பட்டது. திருவள்ளூர் நகரில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால், ராஜாஜிபுரம், வி.எம்.நகர், ஜெயாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளன. அதே போல், திருப்பாச்சூர் அருகே இருளர் காலனியிலும் மழைநீர் புகுந்தது. பட்டாபிராம் அருகே உள்ள சேக்காடு பகுதியில் மழைநீரால் பல குடியிருப்புகள் மிதந்தன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.