சுகாதாரப் பணியாளர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (42). மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து, இவருக்கு இதயத்தின் அயோர்டிக் வால்வு பழுதடைந்தும், மகாதமனி விரிந்து வீக்கமாகவும் இருந்தது தெரியவந்தது.
கரோனா பாதிப்பு இருந்ததால் முதலில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்றில் இருந்து குணமடைந்த பிறகு மகாதமனிக்கும், பின்னர் அயோர்டிக் வால்வும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யப்பட்டது.
இதய அறுவை சிகிச்சை மருத்துவர் சிவராமன் தலைமையில் மருத்துவர்கள், இளவரசன், எழிலன், பிரதீப் ஆனந்த், விவேகானந்தன், நிரஞ்சன், சுகந்தலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை செய்தனர்.
நேற்று மருத்துவமனைக்கு வந்தசுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார். கரோனா தொற்று காலத்தில் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை பாராட்டினார் அப்போது,மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடன் இருந்தனர்.
அப்போது, ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தமிழகத்தில் அனைத்துஅரசு மருத்துவமனைகளிலும், கரோனா தொற்று அல்லாத நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.7 லட்சம் வரை செலவாகி இருக்கும். தமிழகத்தில் புதிய மருத்துவமனைகள் வந்தாலும், ஏற்கெனவே இருக்கிற மருத்துவமனைகளில், முதல்வர் கூடுதலான வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. தற்போது பூஜ்ஜியத்தை நோக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்ற துறைகளின் முன்கள பணியாளர்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசிபோட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.