மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த அஇசமக மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார். 
தமிழகம்

அதிமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்போம்: அஇசமக நிறுவன தலைவர் சரத்குமார் உறுதி

செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியில் ஒன்று, இரண்டு தொகுதிகள் ஒதுக்கினால் போட்டியிட மாட்டோம். கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

இக்கட்சியின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜி.ஈஸ்வரன் தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன், தெற்கு மாவட்டச் செயலாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டனர். பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் பணம் வாங்கி ஓட்டளிக்காமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் சமக இருப்பதாக முதல்வர் பழனிசாமி சொல்லியிருக்கிறார். எங்களது கட்சிக்கு தனிச் சின்னம் வேண்டும். கூட்டணியில் ஒன்று, இரண்டு தொகுதிகள் ஒதுக்கினால் போட்டியிட மாட்டோம். கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறுவோம்.

மூன்றாவது கூட்டணி அமைந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தயாராக உள்ளோம். தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா போட்டியிடுவார். எங்களுக்கு திமுக கூட்டணி பற்றிய சிந்தனை அறவே இல்லை. சசிகலா முதலில் அவரது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கட்டும். அதன் பிறகு அரசியல் பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT