சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிடும் என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மதுரை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தேர்தல் பிரசாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று மதுரை வந்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கட்சி தொண்டர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டங்களில் பங்கேற்ற அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசியதாவது:
64 திருவிளையாடல்களும் நடந்த பூமி மதுரை. நெசவுத்தொழிலுக்காக தமிழகத்திற்கு ரூ.1,600 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கட்டமைப்புக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் சென்னை திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி செல்லுமிடங்கள் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
பாஜக நடத்திய வேல் யாத்திரை இரண்டு வெற்றிகளை தந்துள்ளது. முதலாவது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேல் எடுத்தது. மற்றொன்று : தைபூசத்திற்கு தமிழக அரசு பொதுவிடுமுறை வழங்கியது. இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிடும். ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். அதற்காக பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பாஜகவை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.