ஆள்பிடித்தாலும், வேல் பிடித்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று நேற்று மதுரையில் நடந்த எம்ஜிஆர்-ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
"தீய சக்திகளின் சவால்களை முறியயடித்து ஜெயலலிதாவின் நினைவு ஆலயம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இன்று மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு திருக்கோயில் கட்டி திறக்கப்பட்டது. கேட்டதை கேட்டால் கொடுக்கக்கூடிய தெய்வங்கள் பல உண்டு. ஆனால், கேட்காமலே கொடுத்த தெய்வங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்களுக்காக கோயிலே அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கட்டியுள்ளார் என்று நினைக்கிறபோது அதிமுகவுக்கு பெருமையாக உள்ளது.
தெய்வ சக்தியையும், மக்கள் சக்தியையும் நம்பும் இயக்கம் அதிமுக. ஆனால், சிலர் தெய்வங்களை இழிவுப்படுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் கொண்டாடுவது போல் நடிப்பார்கள். மக்களும், அந்த தெய்வங்களும் அவர்களை பார்த்தக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியைபிடிக்க வடக்கே இருந்து ஆட்களை பிடித்து வந்தார்கள். இப்போது வேல் பிடிக்கிறார்கள். ஆள் பிடித்தாலும், வேல் பிடித்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது. அதிமுக ஆட்சிக்கு எத்தனை இடையூறு வந்தாலும் அதனை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தடுத்து நிறுத்துவான்.
கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிமுக நிகழ்த்திய சாதனை திட்டங்கள் அனைத்தும், இல்லங்களையும் சென்றடைந்துள்ளது. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாகவும், மக்கள் மகிழ்ச்சியாகவும் வாழுகிறார்கள். இதை சீர்குலைக்க ஸ்டாலின் தினமும் புதுபுது அவதாரங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், எந்த அவதாரம் எடுத்தாலும் மக்கள் மனதை ஈர்க்க முடியாது. திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான். கடந்த 10 ஆண்டாக கொள்ளையடிக்க முடியாமல் அவர்கள் கைகள் நமநமத்து போய் உள்ளது. தப்பி தவறி அவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் தங்கள் வழக்கமான கொள்கையான கொள்ளையடிப்பதை தொடர்வார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். திமுகவில் திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதையே சமாளிக்க முடியாமல் திணறுகிறார்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.