ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்றதால் நேர்த்திக் கடனாகப் பழநி முருகன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இடம்பெற்றிருந்தார். இவரது பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதற்கிடையே சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய நடராஜன், பழநி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழநி வந்தார்.
ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வெற்றி கொண்டதை அடுத்து நேர்த்திக் கடனாக பழநி முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து ரோப் கார் மூலம் மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ரோப் கார் நிலையத்தில் நடராஜனை அடையாளம் கண்டுகொண்ட பக்தர்கள் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.