தமிழகம்

சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை; எஃகு கோட்டையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

செய்திப்பிரிவு

யாராலும் அதிமுகவைக் கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை. சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த ஜன.27-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடித்து விடுதலையானார். அவர் தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த சிலர் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் போஸ்டர் அடிப்பது, முகநூல் பதிவு வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம். அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

ஆனாலும், அதிமுக -அமமுக இணைப்பு, சசிகலா அதிமுகவில் இணைவது குறித்த சர்ச்சைகள் ஓயவில்லை. இதனிடையே, சசிகலா விரைவில் குணமடைந்து அறப்பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப்படும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று அமமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ''யாராலும் அதிமுகவைக் கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை.

ஏற்கெனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களும் அதிமுகவில் இடம் இல்லை. அவர்கள் இல்லாமல் அதிமுக ஆட்சியும், கட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

டெல்லியில் முதல்வர் பேசும்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதுவே எங்கள் நிலைப்பாடு.

நமது எம்ஜிஆர் நாளிதழில் ஆயிரம் எழுதுவார்கள்.அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவித்துவிட்டோம்'' என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT