மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 5 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 15 ஆயிரம் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் நேற்று காலை 7 முதல் 8 மணி வரைபணிகளைப் புறக்கணித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுநர்ஸ்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வளர்மதி கூறியதாவது:
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும் என்பது செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை உடனே நிறைவேற்ற வேண்டும். கரோனா தொற்று காலத்தில்தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய செவிலியருக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடுமற்றும் அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாகதொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்து, வரும் காலங்களில் தொகுப்பூதிய முறையை அறவே ரத்து செய்ய வேண்டும். மத்திய செவிலியர்கள் போல, 5 கட்ட காலமுறை பதவி உயர்வு மற்றும் தமிழகஅரசு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி பதவியின் பெயர்மாற்ற அரசாணை வழங்க வேண்டும். இந்திய செவிலியர் குழும விதிகளின்படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் செவிலியர்கள் ஒரு மணிநேரம் பணிகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செவிலியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்புபேட்ஜ் அணிந்து பணியாற்றுவர்.
எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு, முதல்வர் பழனிசாமிக்குஅனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா
இதற்கிடையே, மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி)மூலம் தேர்வான செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். கரோனா தொற்று காலம் உட்பட இதுவரை எம்ஆர்பி மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.