தமிழகத்தில் ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் நான்கின் ஒரு பகுதியாக குறைந்துள்ளதாக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய மற்றும் துணிச்சலோடு செயல்பட்ட ரயில்வே போலீஸாரை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பாராட்டு சான்றிதழ்கள் வழங்கல்
இந்த நிகழ்ச்சிக்கு ரயில்வே டிஜிபி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். ஐ.ஜி வனிதா மற்றும் டிஐஜி. ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த ஆண்டு ரயில்கள், ரயில்நிலையங்களில் நடந்த கொலை,கொள்ளை, திருட்டு உட்பட குற்றவழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய 165 ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் 52போலீஸாருக்கு முதல்வர் பதக்கங்களையும் டிஜிபி. சைலேந்திரபாபு வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு கூறியதாவது:
உழைப்புக்கு கிடைத்த வெற்றி
கடந்த 2019-ம் ஆண்டு 4,392 ஆக இருந்த விபத்துகளின் எண்ணிக்கை 832 ஆக குறைந்துள்ளன. மேலும், குற்றச் சம்பவங்கள் நான்கில் ஒரு பகுதியாகவும் விபத்துகள் மூன்றில் ஒரு பகுதியாகவும் குறைந்துள்ளன. இது ரயில்வே காவல் துறையினரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடைபெற்று வந்தகுழந்தைகள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளன. மேலும் கண்காணிப்புகேமரா மூலம் கண்காணிக்கும்வசதி பலப்படுத்தப்பட்டுள்ளதாலும், கிடைக்கப்பெறும் ரகசியத் தகவல்கள் அடிப்படையிலும் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.