திருவெண்ணெய்நல்லூரில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். 
தமிழகம்

திருவெண்ணெய் நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதுமான இடவசதி இல்லை. இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிய இடத்தில் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக திரு வெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், ஏனாதிமங்கலம், மழையம்பட்டு, அரசூர், அரும்பட்டு, மாதம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 2000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விற் பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு போதுமான அளவு கட்டிட வசதி இல்லை. நெல்லை வாங்க வியாபாரிகள் இங்கு வருவதற்கு தடையாக இடைத்தரகர்கள் செயல்படுவதால் நெல் கொள்முதல் விலை குறைவாக இருந்தது. இதனால் அடுத்த நாள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு வைக்கலாம் என விவசாயிகள் காத்திருந்தனர்.

விவசாயிகள் கொண்டு வந்தநெல் மூட்டைகளை மாற்றுவதற்கு ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் சாக்கு பைகள் இல்லாமல் தெருவில் கொட்டி வைத்துள்ளனர். மழை வந்தால் நெல் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. வேதனை அடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த 2,000 -க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை நேற்று சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல சிரமப்பட்டனர். இப்பிரச்சினைக்கு ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரிகள் தீர்வு ஏற்படுத்தாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு போதுமான அளவு கட்டிட வசதி இல்லை.

SCROLL FOR NEXT