தூத்துக்குடி அருகே குலையன் கரிசல் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிராக விவசாயிகள் நேற்று திடீர் போராட் டம் நடத்தினர்.
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில், எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் தரப்பில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் தங்களின் நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு இழப்பீடு பெற சம்மதம் தெரிவித்தனர்.
இப்பணி தற்போது 95 சதவீதம் நிறை வடைந்த நிலையில் குலையன்கரிசலைச் சேர்ந்த விவசாயிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு எதிராக நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
`எரிவாயு குழாய் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலங்களில் தோண்டப்பட்ட குழிகளை சமன்படுத்தி தராமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால் விவசாயிகள் தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்தும் நீர்ப்பாசன வசதி இருந்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தினர் நிலத்தை சீரமைத்து தராததால் விவசாயம் பாழ்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனத்தினரால் சேதப்படுத்தப்பட்ட நிலங்களை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.