ஜெயலலிதா நினைவு இல்லத்தைத் திறந்தாலும் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. வீட்டைப் பூட்டிச் சாவியைப் பதிவாளரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிற உத்தரவுக்குத் தடை விதித்துச் சாவியை அரசே வைத்துக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதே நேரம் பொதுமக்கள் அனுமதி இல்லை என்பதற்குத் தடை விதிக்கவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லம், நினைவு இல்லமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை நேற்று முன்தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி தொடக்க விழாவை நடத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.
மேலும், தொடக்க விழாவுக்குப் பின் போயஸ் தோட்ட இல்லச் சாவியை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும், பிரதான நுழைவாயிலை மட்டும் திறக்க வேண்டும், கட்டிடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசாக தீபா, தீபக்கை அறிவிக்கும் முன்னும், அறிவித்த பின்னும், வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்கப்பட்டதாகவும், ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திக் கையகப்படுத்தியுள்ளதால் சாவியை அரசே வைத்திருப்பதால் மனுதாரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
அதேசமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு தொடரும் எனவும், வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.