கரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஜன.3-ம் தேதி கரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசிகளின் 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்டப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1,600 பேரிடம் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைந்த அளவாகும்.
மத்தியப் பிரதேசத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் உயிரிழந்தார். இதனால் கரோனா தடுப்பூசி குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மூன்றாம் கட்டப் பரிசோதனை முடியாமல் கோவிஷீல்டு, கோவாக்சின் கரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் அவசரகால அடிப்படையில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதற்குத் தடை கேட்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங்கி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.