மாநகர அரசுப் பேருந்துகள் வந்து செல்ல ரூ.160 கோடியில் கட்டப்படும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் ரூ.160 கோடியில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. இந்தப் பேருந்து நிலையம், முழுக்க முழுக்க மாநகர அரசுப் பேருந்துகள் மட்டுமே நின்று செல்லக்கூடிய வகையில் கட்டப்படுகிறது.
தமிழகத்திலே மாநகரப் பேருந்துகளுக்காக தனியாக, பிரம்மாண்டமாகக் கட்டப்படும் பேருந்து நிலையம், இதுவாகத்தான் இருக்கக்கூடும். புறநகரப் பேருந்துகளுக்காக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையத்தில் ஏற்கெனவே இரு பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. விரைவில் விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.
மதுரையில் மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் புறநகர் அரசுப் பேருந்துகளும், மாநகர அரசுப் பேருந்துகளும் வந்து செல்வதால் மக்கள் எந்த நேரத்திலும் நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய முடிகிறது.
எனினும் தற்போது பெரியார் பேருந்து நிலையத்தின், கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதில், பேருந்துகள் வந்து நின்று செல்வதற்கான நடைமேடை, பயணிகள் காத்திருக்கும் பகுதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பெரியார் பேருந்து நிலையம் திறக்கப்படாததால் வெயில் காலத்தில் புழுதி பறப்பதும், மழைக் காலத்தில் பேருந்து நிலைய சாலைகளில் தெப்பம் போல் தண்ணீர் நிரம்பி நிற்பதாலும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். பேருந்து நிலையப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் பேருந்துகளுக்காகச் சாலைகளில் காத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. அதனால், கூடுதல் பணம் கொடுத்து ஆட்டோ அல்லது கார்களில் செல்ல வேண்டியுள்ளது. ஆட்டோவில் செல்ல வசதியில்லாதவர்கள், மழையிலும், வெயிலிலும் தினமும் துயரப்படுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் கேட்டபோது, ''பிப்வரி மாத இறுதிக்குள் பேருந்து நிலையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப் பணிகள் இரவு பகலாக முடுக்கி விடப்பட்டுள்ளன. உறுதியாக பிப்ரவரியில் பெரியார் பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும். எனினும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் 3 மாதத்திற்குப் பிறகு, அது செயல்பாட்டிற்கு வரும்'' என்று தெரிவித்தார்.