தமிழகம்

தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெற்றி பெறும்: பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி நம்பிக்கை

கி.மகாராஜன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரு இலக்க இடங்களில் வெற்றி பெறும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் நாளை (ஜன.30) நடைபெறுகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மதுரையில் நாளை (ஜன.30) தொடங்குகிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடைபெறும். இதில் பாஜகவின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டணி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. இதைப் பிரேமலதாவே தெரிவித்துள்ளார்.

சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆகியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடு, அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும். அதுகுறித்து இப்போதும் எதையும் சொல்ல முடியாது''.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறுகையில், ''மதுரையில் ஜே.பி.நட்டா நாளை பேசவுள்ள இந்த இடத்தில்தான் கடந்த 2011-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கினார். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தைத் தொடர்ந்து பாஜக பாதுகாக்கும். பிரதமர் மோடி பிற மாநிலங்களை விடத் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை வழங்கியுள்ளார். இதனால் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

SCROLL FOR NEXT