காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள் இன்று (ஜன.29) ஒருநாள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுகாதார செவிலியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நலவாழ்வு சங்கத்தின் சார்பில், காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்துக்கு காரைக்கால் மாவட்ட சங்கத் தலைவர் காயத்ரி தலைமை வகித்தார்.
நலவழித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாத ஊதியத்தைத் தடையின்றி வழங்க வேண்டும். தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்ட செவிலியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
நியமன விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். செவிலியர்களுக்கு டெல்லிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
வழக்கமான பணிகளைவிட கூடுதல் பணிச்சுமைகளைக் குறைக்க வேண்டும். எம்.ஏ.சி.பி உடனடியாக வழங்க வேண்டும். பணி மூப்புப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.