புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அ.வெங்கடாசலம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர், கடந்த 2010 அக்டோபர் 7-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த செ.கணேசன், வீரக் குடியைச் சேர்ந்த ரா.முத்துக்குமார், தேவகோட்டையைச் சேர்ந்த சீ.முத்துகிருஷ்ணன், லெ.தில கேஸ்வரன், திருவாடணை பா.மணி கண்டன் ஆகியோரை வடகாடு போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கை ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத் துக்கு மாற்றி, விசாரணையைத் தொடங்குவதற்காக ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் கணேசன் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் கணேசனை கடந்த 4 ஆண்டுகளாக தேடிவந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையைத் தொடங்குமாறு கடந்த மாதம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், வடகாடு காவல் ஆய்வாளர் கரிகால்சோழன் தலைமையிலான தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் கணேசனை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு விசாரணை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.