தமிழகம்

இந்தியன் வங்கி கிளையில் சர்வர் பழுது: பாஸ்புக் என்ட்ரி செய்ய முடியாமல் அவதி - உங்கள் குரலில் வாசகர் புகார்

செய்திப்பிரிவு

கலியப்பட்டு இந்தியன் வங்கி கிளையில் சர்வர் அடிக்கடி பழுதடைவதால் பாஸ் புத்தகங்கள் என்ட்ரி செய்ய முடியாமல் உள்ளதாக வாசகர் ஒருவர் உங்கள் குரலில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படூரைச் சேர்ந்த டி.செந்தில் என்ற வாசகர் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

நான் படூரை அடுத்த கலியப் பட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளேன். மேலும், எனது வியாபார தேவைக்காக இந்த வங்கியில் கடன் வாங்கினேன். அத்தொகையை தற்போது தவணை முறையில் மாதம்தோறும் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகை செலுத்திய உடன் வங்கியில் எனது பாஸ் புத்தகத்தைக் கொடுத்து என்ட்ரி செய்து தருமாறு கூறுவேன்.

ஆனால், சர்வர் பழுதடைந்துள்ளதாகக் கூறி எனது பாஸ் புத்தகத்தை என்ட்ரி செய்வதில்லை. கடந்த 4 மாதங்களாக இதே காரணத்தைக் கூறுகின்றனர். இதுகுறித்து, வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், பாஸ் புக் என்ட்ரி செய்யாததால் என்னுடைய கணக்கில் எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என தெரிந்து கொள்ள முடியவில்லை. இதே நிலைதான் மற்ற வாடிக்கை யாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு செந்தில் கூறினார்.

இதுகுறித்து, இந்தியன் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சில நேரங்களில் சர்வர் பிரச்சினை ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், நான்கு மாதங்களாக பழுதடைந்துள்ளதாகக் கூறுவது தவறு. எனினும், இப்பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT