திருப்பூரில் பத்திரப் பதிவு அலுவலக மோசடி விவகாரத்தில் அரசுக்கு சேர வேண்டிய பணம் ரூ.68 லட்சத்தை கையாடல் செய்ததாக, அரசு அதிகாரி உட்பட இரண்டு பேரை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட பத்திரப் பதிவுத் துறை பதிவாளராக இருப்பவர் சு.ராமசாமி. இவர், மாநகரகாவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் சமீபத்தில் அளித்த புகாரில், "திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த வளாகத்திலுள்ள இணை சார் பதிவாளர் எண்:1, 2, தொட்டிபாளையம் சார் பதிவாளர் மற்றும் நல்லூர் சார் பதிவாளர் அலுவலகங்களிலிருந்து, அரசுக்கு செலுத்த வேண்டிய பத்திரப் பதிவு தொகையை கையாடல் செய்ததாக புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், மேற்படி சார் பதிவாளர் அலுவலகங்களில் 47 பத்திரப் பதிவுக்கு பொதுமக்கள் அரசுக்கு இணைய வழியில் செலுத்திய பணம் மொத்தம்ரூ.68 லட்சத்து 93,432-ஐ, சார் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தனியார் ஒப்பந்த கணினி அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் கூட்டு சதி செய்து கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூட்டுசதி, மோசடி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற பத்திரப் பதிவு நடைமுறைகளை மாநகர, மத்திய குற்றப் பிரிவினர்பார்வையிட்டதுடன், பதிவு செய்தபொதுமக்கள், பத்திர எழுத்தர்கள், கணினி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். வங்கிக் கணக்குகளின் ஆவணங்களை திரட்டியும் விசாரித்தனர்.
இதில், இணை சார் பதிவாளர் எண்:1 அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ஈரோடு வில்லரசம்ரபட்டியைச் சேர்ந்த ஆர்.சங்கர் (33), நெருப்பெரிச்சல் பகுதியில் இணையவழி (ஆன்லைன்) தட்டச்சு அலுவலகம் நடத்தி வரும் ஜெய்சங்கர் (35) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட இருவரும், திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை, ஏற்கெனவே பத்திரப் பதிவுத் துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இணைப் பதிவாளர்கள் விஜயசாந்தி, முத்துக்கண்ணன், உதவியாளர்கள் பன்னீர்செல்வம், சங்கர், இளநிலை உதவியாளர் மோனிஷா உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.