சீன கடன் செயலி நிறுவன உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செயலி நிறுவனங்களை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஜியா யமாவ்(38), யுவான் லூன்(28) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டனர். மேலும், சீன நிறுவனங்களுக்கு சிம் கார்டு விநியோகம் செய்த 4 பேர் உட்பட இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் கடன் செயலி விவகாரத்தில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டாலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ‘ஹாங்’ என்ற சீன நாட்டவர்தான். இவர் சிங்கப்பூரில் இருந்துகொண்டே இந்த நிறுவனங்களை இந்தியாவில் நடத்தி வந்தது தெரியவந்தது. ஹாங் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூருவில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டதும் ஹாங்,சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்குதப்பிச் சென்று விட்டார். அவரை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், ஹாங்கை கைது செய்ய சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ உதவியும்கேட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் இருப்பதால், வெளி நாடுகளுக்கு சென்று விசாரணைநடத்த வேண்டி இருந்தது.
இந்நிலையில், சீன கடன்செயலி நிறுவனத்தின் உரிமையாளர் ஹாங், இனி வேறு நாடுகளுக்கு சென்றால் விமான நிலையத்திலேயே கைது செய்யும் வகையில், இன்டர்போல் போலீஸாரின் உதவியுடன் உலகம் முழுவதும் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.