தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சென்னை வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா நேற்றுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிவுற்றது. இதைத் தொடர்ந்து, அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனர். பக்தர்கள் தரிசனத்துக்கு வசதியாக, தெற்கு கோபுர வாசலில் 2வகை வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. முகக் கவசம் அணிந்து வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்யஅனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பகல் 1 மணியில் இருந்துமாலை 4 மணி வரை மூலவர்சந்தனக் காப்பு அலங்காரத்திலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை புஷ்பாங்கி அலங்காரத்திலும் காட்சியளித்தார்.
கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடந்துவருவதால் பால்குடம், காவடி,அலகு குத்துதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவரம் தெரியாமல் காவடி எடுத்து வந்த பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
சென்னை பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். கோயிலில் உற்சவர் முத்துக்குமார சுவாமி மற்றும் மூலவர் கந்தசாமிக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பலரும் பால் குடம் எடுத்து, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர். நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிங்கார வேலருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. சந்திரசேகரர் தெப்பம் 5 சுற்று உலாவந்தது. கரோனா பரவலைகருத்தில் கொண்டு, இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. யூ-டியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட தெப்ப நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர். 2-வது நாளான இன்று சிங்காரவேலர் தெப்பம் 7 சுற்றும், 3-வது நாளான நாளை சிங்காரவேலர் தெப்பம் 9 சுற்றும் உலா வர உள்ளது.
இதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று பொது விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.