உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட மூத்ததேவி சிலை (மூதேவி). 
தமிழகம்

உத்திரமேரூர் அருகே பல்லவர் கால சிலை கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பல்லவர் கால சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது.

உத்திரமேரூரில் உள்ள குழம்பேஸ்வரர் கோயிலில் கடந்த டிச.13-ம் தேதி 565 கிராம் எடையுள்ள தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. இப்புதையலை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குழம்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ள தெருவில் உத்திரமேரூர் பேரூராட்சியினர் வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது, நேற்று அங்கிருந்து கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் அச்சிலையை எடுத்து சுத்தம் செய்து வைத்திருந்தனர். இந்தச் சிலை பற்றி அறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து, இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்ததேவி என்ற ஜேஷ்டா தேவி சிலை என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன்கூறும்போது, ‘இங்கு கண்டெடுக்கப்பட்ட மூத்ததேவி சிலை 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. இதில் மூத்ததேவி வெண்கொற்றக் குடையின்கீழ் கரண்ட மகுடத்துடன், காதில் பனை ஓலையால் ஆன பத்ர குண்டலமும், மார்பில் அணிகலன்கள், இடுப்பில் ஆடையுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

இவரின் வலப்புறம் அவரின்சின்னமான காக்கை உருவம் உள்ளது. அதன்கீழ் அவரின் மகன் மாட்டுத் தலை கொண்டமாந்தனும், இடப்புறம் அவரது மகள் மாந்தியும், அவள் காலுக்குக்கீழ் பெண் அடியவர் ஒருவர் பணப்பெட்டியை தலையில் வைத்துள்ள நிலையிலும் காணப்படுகிறார்.

மூத்ததேவி மறுவியதால் மூதேவி

மூத்ததேவிக்கு தவ்வை, ஜேஷ்டா தேவி என்ற பெயர்களும் உண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமிதேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களிலும், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும்புலவர்கள் எழுதிய பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளன.

பல்லவர் காலத்தில் மூத்ததேவி என்ற இந்த தாய் தெய்வம் வழிபாட்டின் உச்சத்தில் இருந்தது. சோழர் காலத்திலும் வளமையின் அடையாளமாக போற்றப்பட்டது. பின்னர் மூதேவி என்று மருவி வழிபாடு இல்லாமல் போயுள்ளது. இந்த சிலையின் அடிப்பாகம் சற்று சிதைந்த நிலையில் உள்ளது. இந்தச் சிலையை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.

SCROLL FOR NEXT