தமிழகத்தில் 104 அணைகள் உள்ளன. இதில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சியில் கட்டியது வைகை அணை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணை, கடந்த 1959-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி கட்டித் திறக்கப்பட்டது. 29-ம் தேதி பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வைகை அணை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. வரும் 29-ம் தேதி வந்தால் அணை பயன்பாட்டிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் கடலில் நேரடியாகக் கலக்காத ஒரே ஆறு வைகை ஆறு. இந்த ஆறு, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் போய் கலந்து கடலில் கலக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வருஷ நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகி 258 கி.மீ., தென் தமிழகத்தில் ஓடி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைப் பல்லாயிரம் ஆண்டுகள் செழிக்க வைத்தது.
வைகை அணையையும், வைகை ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேரடியாகக் கள ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். இதற்காக இக்கல்லூரியில் 250 மாணவர்கள் ஆண்டுதோறும் ‘வைகையின் சுற்றுப்புறம்’ என்ற ஒரு படிப்பையே படிக்கிறார்கள்.
இதுகுறித்து கல்லூரி உதவிப் பேராசிரியர் ராஜேஷ் கூறுகையில், ‘‘வைகை இலக்கியங்களில் புகழப்பட்ட வைகை ஆறு, தற்போது தன்னுடைய இயல்பான நீரோட்டத்தையும், பெருமைகளையும் இழந்து நிற்கிறது. அதனால், முக்கியத்துவம் பெற்ற வைகை அணையில் இருந்து தண்ணீர் பெற முடியாமல் தென் மாவட்ட மக்கள், குடிநீருக்காகக் காவிரி ஆற்றை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாரம்பரிய வைகை ஆற்றையும், வைகை அணையையும் எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். அணை கட்டுவதற்கு ரூ.2 கோடியே 90 லட்சம் மட்டுமே செலவானது. மீதம் ரூ.40 லட்சம் ரூபாய் இருந்தது. முதல்வர் காமராஜர் அந்தப் பணத்தில் அணையின் அடிவாரத்தில் அணையைப் பார்வையிட வரும் பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், அணையின் இயற்கைச் சூழலை ரசிக்கவும் மீதமிருந்த பணத்தில் பூங்கா கட்டிக் கொடுத்தார்.
அணையின் உயரம் 111 அடியாக இருந்தபோதும், அணையின் நீர்த்தேக்க அளவு 71 அடியாக இருக்கிறது. இதன் கொள்ளளவு 6 ஆயிரத்து 91 மில்லியன் கன அடியாகும். அணை கட்டிய பிறகு முதல் முறையாக 1960ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நிரம்பியது. தொடர்ந்து 1961, 1962, 1963 ஆண்டுகளில் தொடர்ந்து அணை நிரம்பியது.
அதன் பிறகு 1966, 1971, 1972, 1974, 1977, 1979, 1981, 1984, 1987, 1992, 1993, 1994, 1997, 1998, 1999, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அணை நிரம்பியது. 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. தற்போது கடந்த ஒரு வாரத்திற்கு முன் அணை நிரம்பியது. அணையில் கடந்த காலத்தைவிட குறைவான தண்ணீரையே தேக்க முடிகிறது. அதற்கு அணையில் காணப்படும் மணல் திட்டுகளும், சேறும், சகதியும் முக்கியக் காரணம்.
அணையைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக உள்ளது. ஆனால், அது நடக்காததால் அணையில் தண்ணீர் போதுமான தண்ணீரை நிரப்ப முடியாமல் அடிக்கடி மதுரை மாநகராட்சி, புறநகர் கிராமங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. மேலும், வைகை ஆற்றங்கரைகள் திறந்தவெளிக் கழிப்பிடமாகவும், குப்பைகள் கொட்டப்படும் தொட்டியாகவும் மாறியுள்ளன.
ஹோட்டல் உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அதிக அளவு ஆற்றில் கொட்டப்படுகின்றன. ஆற்றங்கரைகளில் பொதுக் கழிப்பிடம் கட்டிக்கொடுத்தாலும் அதற்கான தண்ணீர், பராமரிப்பு இல்லாததால் மக்கள் மீண்டும் ஆற்றங்கரைகளிலே வந்து கழிப்பிடம் செல்கின்றனர். ஆற்றில் சீமைக் கருவேல மரங்களும், ஆகாயத் தாமரைச் செடிகளும் அதிக அளவு உள்ளன. அதனால், வைகை அணையைத் தூர்வாருவதோடு, ஆற்றங்கரையும் அதன் நீரோட்டப் பகுதிகளையும் பராமரிக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.