இரண்டு நாட்கள் காத்திருந்து நல்ல நேரம் பார்த்து இன்று மாலையில் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீதான அதிருப்தியால் நமச்சிவாயம் அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணையக் கடந்த 26-ம் தேதி டெல்லி புறப்பட்டார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் 27-ம் தேதி காலை பாஜகவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அமைச்சவைக் கூட்டம் காரணமாக இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. காலை முதல் இரவு வரை காத்திருந்தார். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமையான இன்று காலை இணைப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று காலையும் இணைப்பு நடக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்தபோது, "தைப்பூசம், பவுர்ணமி என்பதால் மாலை இணைப்பு விழாவுக்கு நேரம் ஒதுக்கித் தர நமச்சிவாயம் கோரியுள்ளார். வழக்கமாக சகுனம் பார்த்து, நேரம் காலம் பார்த்தே செயல்படுவது அவர் வழக்கம் என்பதால் இணைப்பு காலதாமதமானது" என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை பாஜக தேசிய பொதுச் செயலர் அருண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் நமச்சிவாயம் இணைந்தார். அவருடன் தீப்பாய்ந்தானும் கட்சியில் சேர்ந்தார். புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.