தமிழகம்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: விற்பனை 20% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசு சமீபத்தில் அறிவித் துள்ள தங்க முதலீடு திட்டம் மற்றும் டாலர் மதிப்பு குறைந்ததால் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. தற்போது பவுன் ரூ.19,328-க்கு விற்கப்படுகிறது. இதனால், நகை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டில் கோயில்கள் மற்றும் மக்களிடம் இருக்கும் தங்கத்தை முதலீடாக மாற்றவும், தங்கம் இறக்குமதி தேவையை குறைக்க வும் மத்திய அரசு தங்கத்தில் முதலீடு செய்ய 3 வகையான புதிய திட்டங்களை கடந்த 5-ம் தேதி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தெரிந்து கொள்ளவும், முதலீடு செய்யவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலையும் கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘திஇந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள தங்கம் முதலீடு திட்டத்தால் தங்கம் விலை உயர்வு கட்டுக்குள் வருகிறது என்பதை உணர முடிகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலையில் ஏற்ற, தாழ்வுகள் இருந்தாலும் 9-ம் தேதி முதல் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகை கடைகளிலும் சுமார் 10 முதல் 20 சதவீதம் வரையில் விற்பனை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT