மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

சிற்ப கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு: மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் சிற்ப கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு மற்றும் ஐந்துரதம் பகுதி வாகன நிறுத்துமிடத்தில் மரக்கிளைகளை வெட்டி அகற்றியதது உள்ளிட்ட முறைகேடுகளுக்காக பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றம், சிற்பம் மற்றும் கைவினை கலைஞர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம் ஐந்துரதம் சிற்ப பகுதியில் சுற்றுலா வாகனங்களைநிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான மரங்கள் இருந்தன. இவற்றின் நிழலில்வாகனங்கள் நிறுத்தி இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மேற்கண்ட மரங்களின் கிளைகள் தேவையின்றி வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக கூறி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், சிற்பம் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய செயலாளர் நரேஷ் தலைமையில், பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பேரூராட்சி நிர்வாகத்தில் சாலை அமைப்பது மற்றும்சிற்ப கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்யப்பட்டது, தேவையின்றி மரக்கிளைகளை வெட்டிஅகற்றப்பட்டது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தேசியக் குழு உறுப்பினர் ஜெகதீசன், மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் சேகுவராதாஸ், செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT