தமிழகம்

பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

செய்திப்பிரிவு

பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 95.

பித்துக்குளி முருகதாஸ் 1920-ம் ஆண்டும் கோவையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இவர் தனது தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்.

1936-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸார் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அவரது இடது கண் பார்வை பறிபோனது.

1947-ல் தனது இசைப் பயணத்தை தொடங்கிய பித்துக்குளி முருகதாஸ், 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடியிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். அவர் பாடிய அலைபாயுதே கண்ணா பாடல் மிகப் பிரபலமானது. திருப்புகழ் பாராயணத்தில் பெயர் பெற்றவர் பித்துக்குளி முருகதாஸ்.

பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். பின்னாளில், கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீக குரு சுவாமி ராமதாஸ் முருகதாஸ் என்ற பெயரை பித்துக்குளி என்ற நாமத்துடன் இணைத்தார். அன்று முதல் பித்துக்குளி முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார்.

SCROLL FOR NEXT