தமிழகம்

எழுவர் விடுதலை; ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கி.மகாராஜன்

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவரை 2 மாதம் பரோலில் விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''ரவிச்சந்திரன் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ராஜீவ் கொலையில் தொடர்புடைய ரவிச்சந்திரன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

இந்நிலையில் கரோனாவால் ரவிச்சந்திரனை 3 மாத பரோலில் விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பினேன். ஆனால், மத்திய அரசின் சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் தண்டிக்கப்பட்டதால் பரோல் வழங்க முடியாது என சிறை நிர்வாகம் மறுத்தது. இதை நிராகரித்து ரவிச்சந்திரனை 2 மாத பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ராஜீவ் கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை பிப். 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT