தமிழகம்

மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்குத் தண்ணீர் திறக்கக் கோரி வழக்கு: நெல்லை, குமரி ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து ராதாபுரம் பகுதிக்குத் தண்ணீர் திறக்கக் கோரிய வழக்கில் நெல்லை, குமரி ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராதாபுரம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுக்காவில் உள்ள 52 குளங்கள் பாசன வசதிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தோவாளை கால்வாய் வழியாக ராதாபுரம் கால்வாய்க்கு 150 கன அடி தண்ணீர் வழங்க 1972-ல் கால்வாய் வெட்டப்பட்டது.

பின்னர் ராதாபுரம் தாலுக்காவில் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடிப் பாசனத்துக்கும், 52 குளங்கள் வழியாக 1,012 ஏக்கர் நன்செய் நிலம் பாசன வசதி பெறவும், போதுமான தண்ணீரைத் தேக்குவதற்காக பேச்சிப்பாறை அணை 42 அடியிலிருந்து 48 அடியாக உயர்த்தப்பட்டது.

தேவாளை கால்வாய் 450 கன அடி கொள்ளளவு கொண்டதாக இருந்தது. பல இடங்களில் கால்வாய் பழுதடைந்திருந்ததால் 250 கன அடி நீர் மட்டுமே விடப்பட்டது. இந்தப் பழுது 2009-ல் சரி செய்யப்பட்டது. தற்போது 450 கன அடி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் தோவாளை கால்வாய் பலமாக உள்ளது.

தற்போது பேச்சிப்பாறை அணையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இருப்பினும் ராதாபுரம் கால்வாய்க்கு தினமும் 25 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் ராதாபுரம் தாலுக்காவில் நடைபெற்று வரும் வேளாண் சாகுபடி பாதிக்கப்படுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தினமும் 150 கன அடி தண்ணீர் திறந்து 52 குளங்களையும் நிரப்ப உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் அப்பாவு தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ''பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநிதி மற்றும் ராமநதி அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்த அணைகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் தாமிரபரணி ஆறு வழியாக வீணாகக் கடலில் கலக்கிறது. இவ்வாறு கடந்த 15 நாட்களாக சுமார் 7,000 முதல் 40 ஆயிரம் கன அடி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த நீரை மணிமுத்தாறு பிரதான கால்வாய் வழியாக ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி பகுதியிலுள்ள குளங்களுக்குத் திருப்பிவிட உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு மனுக்கள் தொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர், நெல்லை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT